Site icon Tamil News

ஹாங்காங்கின் இணைய விதிகள் குறித்து அமெரிக்க நிறுவனங்கள் எச்சரிக்கை

ஹாங்காங்கில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இணைய விதிமுறைகள், தங்கள் கணினிக் கட்டமைப்புகளில் அதன் அரசாங்கம் தலையிட வழிவகுக்கக்கூடும் என்று அமெரிக்க நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.ஆசிய இணையக் கூட்டமைப்பு இவ்வாறு எச்சரித்துள்ளது. அமேசான்.காம், கூகல், மெட்டா தளம் போன்றவை இக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.

அண்மை வாரங்களில் ஹாங்காங்கின் புதிய இணைய விதிகளை மேலும் சில அமைப்புகள் விமர்சித்தன.

நகரின் முக்கிய உள்கட்டமைப்பை இணையத் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் புதிய விதிகள் வரையறுக்கப்பட்டதாக ஹாங்காங் அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தனர்.ஆனால், பரிந்துரைக்கப்பட்டுள்ள விதிகள், சேவை வழங்கும் நிறுவனங்களின் நேர்மைக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கக்கூடும் என்பது விமர்சகர்களின் வாதம்.

நகரின் மின்னிலக்கப் பொருளியல் மீதான நம்பிக்கையைப் புதிய விதிகள் குலைக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

பரிந்துரைக்கப்படும் புதிய சட்டம் தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கவேண்டும் என்று உள்ளூர் அமெரிக்க வர்த்தகர் சபையும் (அம்சாம்) ஹாங்காங் பொது வர்த்தகர் சபையும் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளன.

புதிய பரிந்துரைகளில் ஒன்று, அரசாங்க அதிகாரிகளுக்கான விசாரணை அதிகாரம். அதன்கீழ், அவர்கள் தனியார் நிறுவனங்களின் முக்கிய கணினிக் கட்டமைப்புகளுடன் தங்கள் கருவிகளை இணைக்கவும் அவற்றில் கணினி நிரல்களைச் சேர்க்கவும் முடியும்.இத்தகைய அதிகாரம், தனியார் நிறுவனங்கள் வழங்கும் சேவையில் தலையிட்டு, தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அம்சாம் ஆகஸ்ட் 1ஆம் திகதி எழுதிய கடிதத்தில் சுட்டியுள்ளது.

நிறுவனங்கள் முன்வைத்துள்ள கவலைகள் குறித்து ஹாங்காங் அரசாங்கமோ நகரின் பாதுகாப்பு அமைப்போ கருத்துரைக்கவில்லை.கூகுல் நிறுவனப் பேச்சாளர், ஆசிய இணையக் கூட்டமைப்பின் கடிதம் குறித்துக் கருத்துரைக்க மறுத்துவிட்டார். அமேசானும் மெட்டாவும் இன்னும் கருத்துரைக்கவில்லை.

ஹாங்காங்கின் பொருளியல், பொதுப் பாதுகாப்பு, தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கட்டிக்காக்க இணையப் பாதுகாப்பு மசோதா அவசியம் என்று அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தனர். சீனா, சிங்கப்பூர், பல்வேறு மேலை நாடுகளில் இத்தகைய சட்டங்கள் அமலில் இருப்பதை அவர்கள் சுட்டினர்.

Exit mobile version