Site icon Tamil News

இரு முறை படுகொலை முயற்சிகள் ; ஆதரவு திரட்டுவதில் தீவிரம் காட்டும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டோனல்ட் டிரம்ப் மீது அண்மை மாதங்களில் இரண்டு படுகொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றிக்கொண்டிருந்தபோது துப்பாக்கிக்காரர் ஒருவர் அவரைக் குறிவைத்துச் சுட்டார்.இதில் டிரம்ப்புக்குக் காதில் காயம் ஏற்பட்டது.துப்பாக்கிக்காரரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், செப்டம்பர் 15ஆம் திகதியன்று ஃபுளோரிடாவில் உள்ள வெஸ்ட் பால்ம் பீச்சில் குழிப்பந்து விளையாடிக்கொண்டிருந்த டிரம்ப்பைக் கொல்ல நபர் ஒருவர் முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.அந்த நபர் கைது செய்யப்பட்டார்.தாம் பாதுகாப்பாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

இதற்கிடையே, தம்மீது நடத்தப்பட்ட இரண்டு படுகொலை முயற்சிகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஆதரவு திரட்டுவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.இதுவரை அவரை எதிர்த்துப் போட்டியிடும் கமலா ஹாரிசின் பக்கம் வாக்காளர்கள் சாய்வது போல தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.வாக்காளர்களை மீண்டும் தமது பக்கம் ஈர்க்க டிரம்ப் மும்முரம் காட்டி வருகிறார்.

இதற்கிடையே, தம்மீது நடத்தப்பட்ட இரண்டு படுகொலை முயற்சிகளுக்கு தேர்தலில் தம்மை எதிர்த்துப் போட்டியிடும் கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கருத்துகளே காரணம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்துக்குத் தாம் கேடு விளைவிப்பதாக அவர்கள் இருவரும் அடிக்கடி கூறுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது என டிரம்ப் குறைகூறினார்.தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களின் சுதந்திரம் பறிபோய்விடும் என்று கமலா ஹாரிசும் அதிபர் பைடனும் அமெரிக்கர்களைப் பயமுறுத்துவதாக டிரம்ப் கூறினார்.

இதற்கிடையே, செப்டம்பர் 15ஆம் திகதியன்று டிரம்ப்பைக் கொல்ல முயன்றதாகக் கூறப்படும் 58 வயது ரயன் வெஸ்லி ரவுத் செப்டம்பர் 16ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.ரவுத் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Exit mobile version