Site icon Tamil News

சென்னையில் சோகம்… தண்ணீர் பக்கெட்டிற்குள் தவறி‌ விழுந்து ஒரு வயது குழந்தை பலி!

சென்னையில் தண்ணீர் பக்கெட்டிற்குள் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரிசூலம் லக்ஷ்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜகுரு(24). இவருக்கு திருமணமாகி காயத்ரி (20) என்ற மனைவியும், ஒரு வயதில் பிரணவ்ராஜ் என்ற மகனும் இருந்தனர். பெருங்குடியில் உள்ள குப்பைக்கிடங்கில் லாரி ஓட்டுநராக ராஜகுருவும், அவரது மனைவி, காயத்ரி குரோம்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியிலும் வேலை பார்த்து வருகின்றனர்‌.

இந்நிலையில் ராஜகுருக்கு நேற்று விடுமுறை என்பதால் வீட்டில் தனது குழந்தையுடன் இருந்துள்ளார். நேற்று மாலை குழந்தை பிரணவ் வீட்டில் பாதி தண்ணீர் இருந்த பக்கெட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென தவறி அதற்குள் விழுந்தார். இதனால் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவர் தந்தை, உடனே குழந்தை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு குழந்தை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் காயத்ரி புகார் அளித்தார். இதன் பேரில் பொலிஸார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version