Site icon Tamil News

யாழில் கேக் வெட்டியவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு 50 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள், அண்மையில் ஒன்று கூடி தமது கும்பலைச் சேரந்த ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.அதனை டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் செயற்பாடானது வீதியில் சென்ற பொதுமக்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட போதிலும் பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.

சம்பவம் தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்ததையடுத்து சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடி, மக்களின் இயல்வு வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் களிப்பில் ஈடுபட்டவர்க்ளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இருவரை கைது செய்து 14 ஆம் திகதி சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் முற்படுத்தி இருந்தனர்.அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து முற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version