Tamil News

மத்திய புலனாய்வுத் துறைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழ்நாடு அரசு

மத்திய புலனாய்வுத் துறை (CBI)க்கு அளிக்கப்பட்டு இருந்த அனுமதியை திரும்பப் பெற்று இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், “மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, (Delhi Special Police Establishment Act. 1946 (Central Act XXV of 1946)}-ன் பிரிவு 6-ன்படி வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டு இருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டு உள்ளது.

இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக. தமிழ்நாடு அரசின் முன்அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடங்கி தற்போது அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜி வரை பலரை மத்திய புலனாய்வு நிறுவனங்கள் விசாரணைக்கு அழைப்பது, கைது செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் இதுபோல் கைதாகி உள்ளார்.

டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் சகோதரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினரும் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகருமான அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோரும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், நேற்று செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

அதேபோல் தலைமை செயலகத்திலும் 13 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இந்த நிலையில் நேற்று இரவு சோதனை முடிந்த பிறகு அவரை கைது செய்தது.

Exit mobile version