Tamil News

பத்தாவது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டம் : கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை

பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி உரிய கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வினை வழங்கமுன்வரவேண்டும் என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி பத்தாவது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை (15) முதல் போராட்டத்தில் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மகாவலி என்னும் போர்வையில் எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே,மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியிருப்புகளை உடனடியாக நிறுத்து, அரசே மயிலத்தமடு,மாதவனையை மேய்ச்சல்தரையாக பிரகடனப்படுத்து போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினார்கள்.

இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றிய உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் உள்ள பால் வளத்தினைக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தமுடியாத அரசியல் தலைமைகள் சர்வதேச நாணயத்திடம் கையேந்தும் சூழ்நிலையேற்பட்டுள்ளதாகவும் உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும்போதே அவர்களுக்கான கடனை வழங்குவதற்கு சர்வதேச நாணயத்தியம் உடன்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைப்பதாக சிவில்சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version