Site icon Tamil News

இலங்கை அமைச்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அமைச்சர்கள் ஹரீன் பெர்ணாண்டோவும் மனுஷநாணயக்காரவும் வெளியேற்றப்பட்டமை சட்டரீதியானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக இருவரும் நாடாளுமன்ற அமைச்சர் பதவிகளை இழக்கும் நிலையேற்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு ஆதரவளித்த அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர்.

இதனையடுத்து ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அவர்கள் இருவரையும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தியிருந்தது.

இதற்கு எதிராக மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்ணாண்டோ ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தத் தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டரீதியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மனு நிராகரிக்கப்பட்டது.

Exit mobile version