Site icon Tamil News

தைவானில் நிலவும் பதற்றம்; சிங்கப்பூரில் அமெரிக்கா, சீன பாதுகாப்பு அமைச்சர்கள சந்திப்பு

அமெரிக்கா, சீனா பாதுபாக்கு அமைச்சர்கள் விரைவில் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச இருப்பதாக பெண்டகன் அமெரிக்க ராணுவத் தலைமையகம் அறிவித்து உள்ளது.

சிங்கப்பூரில் மே 31 முதல் ஜூன் 2 வரை உலக நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் ஷாங்ரி லா வருடாந்திரக் கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது.அந்த நிகழ்வின்போது அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டினும் சீன தற்காப்பு அமைச்சர் டோங் ஜுன்னும் நேரில் சந்தித்துப் பேச இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தைவான் தொடர்பில் பதற்றம் மிகுந்து வரும் நிலையில் அமெரிக்க, சீன அமைச்சர்களின் சந்திப்பு நிகழ உள்ளது.

தைவான் தனக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனைக் கைப்பற்றும் திறன் தன்னிடம் உள்ளதா என்பதை இந்த வாரம் சோதித்துப் பார்த்தது.அதன் ஒரு பகுதியாக தைவானைச் சுற்றிலும் போர்க்கப்பல்களையும் போர் விமானங்களையும் சீனா நிறுத்தியது.

தைவானின் சுய ஆட்சிக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.தைவானின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கப்போவதாக அதன் புதிய அதிபர் லாய் சிங்-டெ சூளுரைத்ததைத் தொடர்ந்து சீனாவின் பயிற்சி தொடங்கி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டோங்குடன் திரு ஆஸ்டின் தொலைபேசி வழியாக உரையாடியதைத் தொடர்ந்து இருவரின் சந்திப்பு பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.மேலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஏப்ரல் மாதம் பெய்ஜிங்கிற்கும் ஷாங்காய்க்கும் சென்று வந்த பிறகு இரு நாடுகளின் உறவில் இருந்த இறுக்கம் தளரத் தொடங்கியது. இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்பும் அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டு நவம்பர் வரை இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு பேச்சுகளில் தாமதம் நிலவி வந்தது.

அந்த மாதம் கலிஃபோர்னியா உச்சநிலைக் கூட்டத்தில் அதிபர் பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் நேரடியாகச் சந்தித்தபோது, இரு நாடுகளின் ராணுவக் கலந்துரையாடலை மீண்டும் தொடங்க அதிபர் ஸி ஒப்புக்கொண்டார்.இதற்கிடையே, அடுத்த வாரம் கம்போடியா செல்லும் திரு ஆஸ்டின், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களைச் சந்தித்துப் பேசுவார். அவரது வெளிநாட்டுப் பயணம் பிரான்ஸில் முடிவுறும்.

 

Exit mobile version