Site icon Tamil News

வீட்டுச் சின்னத்தில் போட்டியிட தமிழரசு கட்சி முடிவு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக வீட்டுச் சின்னத்தில் போட்டியிட இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று (28) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கட்சி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் டெலோ, புளொட் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

மேலும், ஏனைய கட்சிகளின் தீர்மானத்தை அறிவிப்பதற்கு மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்குவதற்கும் உரிய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரேரணைக்கு மத்திய குழு உறுப்பினர்கள் பலர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த வாரம் இங்கு இடம்பெற்றது.

எவ்வாறாயினும், புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version