Site icon Tamil News

”சரணடைந்த பிள்ளைகளையே கொக்குத்தொடுவாயில் புதைத்திருக்கிறார்கள்”: து.ரவிகரன்

கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள்: பல உடலங்கள் இதில் மேலும் தென்படலாம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இரண்டாம் நாளான இன்றையதினம் (07.09.2023) அகழ்வு பணி நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து நடைபெற்றிருந்தது. குறித்த இடத்திற்குள் செல்ல முடியாது. இருந்தாலும் ஒரு தடவை அருகிலே நின்று பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

நாங்கள் அவதானித்த வகையில் பெண்ணினுடைய உடலங்கள் உறுதிபடுத்த கூடியதாக தென்படுகின்றது. அதே நேரம் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ கூறியது போல் துப்பாக்கி குண்டு உடையில் துளைத்திருப்பதனை காணக்கூடியதாக இருந்தது.

ரொபி கடதாசி ஒன்றும் அதில் பகுப்பாய்விற்கு எடுத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை விட நாங்கள் அவதானித்த வகையில் கண்ணுக்கு கட்டும் துணி கூட எடுத்ததனை காணமுடிந்தது.
இதிலிருந்து யோசிக்க கூடியதாக உள்ளது என்னவெனில் பல உடலங்கள் இதில் தென்படலாம் என்பது இதில் இருக்கும் அனைவருக்குமே தெரியும்.

ஏற்கனவே நான் கூறியது போல் 2009 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் சரணடைந்த விடுதலை புலிகளை கொண்டுவந்து கண்ணை கட்டி துப்பாக்கியால் சுட்டு அல்லது சித்திரவதை செய்து சரணடைந்த பிள்ளைகளை இவ்வாறு புதைத்திருக்கிறார்கள் என்பது நான் அறிந்த வகையில் காணக்கூடியதாக உள்ளது என மேலும் தெரிவித்தார்.

Exit mobile version