Site icon Tamil News

பௌத்த மரபுரிமை போருக்கு தயாராகும் தென்னிலங்கை சக்திகள்

போர்கால சூழ் நிலையயைவிட மிக மோசமான நெருக்கடிகளுக்கு தமிழ் மக்கள் முகங்கொடுத்து வருகிறார்கள் என்பதற்கு ஏற்ற உதாரணங்கள்தான் அண்மையில் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்கள்.

முல்லைத்தீவு குரூந்தூர் மலையை ஆக்கிரமிக்க நினைக்கும் பௌத்த துறவிகளின் மற்றும் இனவாதிகளின் அநாகரிகம் மலிந்த செயல்கள், கிழக்கில் திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியில் விகாரை அமைக்க எத்தனிக்கும் விகாராதிபதியின் மூர்க்கத்தனம், பாராளுமன்றில் இராவணன் சிங்களவன் என்ற வரலாற்று திரிப்பு, வட கிழக்கு பௌத்த தொல் பொருள் அடையாளங்கள் மீது கைவைத்தால் தலைகளை கொய்வேன் என்ற மேவின் சில்வாவின் காட்டு மிராண்டித்தனமான சண்டித்தனம், எல்லாவற்றுக்கும் அப்பால் சிங்களவர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக கொழும்பிலுள்ள வட கிழக்கை சேர்ந்த தமிழ் பாராளு மன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகை இடப்படும் என்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிவப்பு எச்சரிக்கை.

இவற்றையெ;லாம் எண்ணிப்பார்க்கிறபோது இந்த தேசம் எங்கு போய்க்கொண்டிருக்கிறது என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. நாட்டின் ஜனநாயக தன்மை எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற தென்பதை அனுமானிக்க முடியவில்லை.

சுதந்திரத்துக்குப்பின் நாட்டின் பிரதமராக வந்த முன்னாள் பிரதமர் எஸ்;.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்க காலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழ் மக்களுக்கெதிரான இனவாத கோஷங்கள் 65 வருடங்களுக்கு மேலாகியும் அமைதியடைந்தபாடில்லை.

இனவாத அரசியல் பிரமுகர்களாக தம்மை காட்டிக்கொண்டவர்களும், இனவாத கட்சிகளும் தொடர்ந்து விரிந்து பரந்த வண்ணமே இருக்கிறது.. பண்டாரநாயக்காவில் தொடங்கிய இனவாத அரசியாவ
ளர்கள் கே.எம்.பி ராஜரட்ண ஆர்.ஜி சேனநாயக்க ஸ்ரீல்மத்தியு தற்போது சரத் வீரசேகரா விமல் வீரவன்ச உதயகம்மன்பில மெவின்சில்வா எனவும், இனவாத அமைப்புக்கள் என பொதுபலசேன ஜாதிகஹெல உறுமய. மொஹொசன், பலகேய, ராவணபலய, சிங்ஹலே தேசிய சுதந்திரமுன்னணி என வளர்ந்துகொண்டேயிருக்கிறது.

தமிழர்களை குறிவைத்து உருவாக்கப்பட்ட இந்த இனவாத அமைப்புக்களாகட்டும் அன்றி மேலே குறிப்பட்ட தலைமைகள் ஆகட்டும், இவை வெளிப்படையாக இனத்துவ முரண்பாடுகளை தூண்டுபவையாக காணப்பட்டாலும் மறைமுக தன்மை கொண்ட பௌத்தபீடங்களும் விகாராதிபதிகளும் இன்னும் இருந்தகொண்டே இருக்கிறார்கள். என்பதற்கு பல உதாரணங்களை எடுத்துக்காட்டலாம்.

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகே நாட்டில் இனவாதத்தை பரப்ப தமிழ்க்கட்சிகள் மற்படுகின்றன மீண்டும் இனவாதம் தலை தாக்கக்கூடிய சூழ் நிலை உருவாகிவருகிறது அதற்கு குருந்தூர்மலை விவகாரமும் 13 திருத்தமும் காரணமாகின்றன. என்று .கூறியது மட்டுமன்றி 13 அவது திருத்தத்தை அமுல் படுத்த விடமாட்டோம் என்று சூளுரைத்து வருகிறார் காமினி லோக்குகே.

இவர்களின் வெளிப்படையான துவேஷங்கள் அல்லது மறை முகமான குரோதங்கள் மீண்டும் ஒரு இனக்கலவரங்களுக்கான தூபமிடும் வார்த்தைகளாகவே காணப்படுகிறது. யுத்தத்துக்கப்பின் தமிழர்களின் கையறு நிலை காரணமாக ஏற்பட்ட மேலாதிக்க சிந்தனைகளும் அரசியல் அதிகார சிந்தனையுமே இந்த கூவி அழைப்புக்கான காரணங்களாக இருக்கின்றன. உண்மையை கூறப்போனால் பாராளுமன்ற வாசத்துக்காக கொழும்பை நோக்கிவரவேண்டியவர்கள் வாசம் செ;ய வேண்டிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாதிகளாலும் தேரர்களாலும் எப்போதும் சுற்றி வளைக்கப்படலாமென்ற பீதியுடனும் பயத்துடனுமே காலத்தை கழிக்கவேண்டியிருக்கிறது.

விரும்பியோ விரும்பாமலோ கொழும்பு வாழ்க்கையை தளமாகாக்கொண்டு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்ந்து வருகிறர்கள். அவர்களை எச்சரிக்கும் வகையிலையே ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். 1977 அம் ஆண்டு திட்டமிட்டு தமிழர்களுக்கு எதிராக தூண்டிவிடப்பட்ட கலவரத்தில் தமிழர்கள் தேடிதேடி. ஆழிக்கப்பட்டார்கள். 1983 யூலை கலவரத்தின்போது தமிழர்கள் வீடுகள் வாசல்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டு ஆயிரக்கணக்கான உயிர்கள் பலி கொள்ளப்பட்டது.

நாட்டின் இன்றை போக்கை அவதானித்துப் பார்ப்பின் இனவாதிகள் நீதித்துறையை அடக்கியாளப்பார்க்கிறார்கள். பாராளுமன்ற முறைமைகளில் பௌத்த மேலாதிக்கத்தையும் சிங்கள பேரினவாதத்தையும் கொடி கட்டி பறக்கவிடும் நிலையே தற்போது காணப்படுகிறது, என்பதற்கு உதாரணமாக உதயகம்மன்பில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டுமென்று அழைப்ப விடுத்திருப்பது மாத்திரமல்ல தமிழ் அடிப்படை வாதிகள் நீதி மன்ற அனுமதியைப்பெற்று பௌத்த உரிமைகளை தட்டிப்பறிக்கப்பார்க்கிறார்கள் என நீதித்துறையையே சாடியிருக்கிறார்.

ஏலவே பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரா வட கிழக்கு நீதி மன்றங்களுக்கு பௌத்த பாரம்பரியங்களுக்கெதிரான தீர்ப்பை வழங்கும் அதிகாரம் இல்லை என்று கூறியதை நாம் மறந்துவிட முடியாது.

இவ்வாரம் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பாக முல்லைத்தீவு நீதி மன்ற நீதிபதி பக்கசார்பாக நடந்துள்ளார் என காரணம் காட்டி முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய விமல் வீரவன்ச நீதி சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளமை மற்றும் முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை குருந்தூர் விகாரையின் விகாராதிபதி மேல் முறையீட்டு நீதி மன்றில் சவாலுக்கு உட்படுத்தியிருப்பது வரலாற்றில் இடம் பெற்ற முதல் சம்பவம் என்பதைவிட இந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்கு நீதித்துறையை நாடும் உரிமையும் இல்லை என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.

சுதந்திர இலங்கையில் கடந்த 75 வருடங்களுக்கு மேலாக அரசியல் உரிமைக்காக போராடி பல ஒப்பந்தங்களை மேற்கொண்டு ஆட்சியாளர்களுடன் பல தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி சர்வதேச ஒப்பந்தம் என்ற வகையில் 13 ஆவது திருத்தத்தை யாசித்தும் இன்னும் அரசியல் உரிமை அற்றவர்களாக வாழும் தொடர் கதையிலிருந்து முற்றுப்பெற முடியாதவர்களாகவே தமிழ் மக்கள் வாழும் நிலை காணப்படுகிறது.

சிங்கள இனவாதிகளின் கற்பனைப்படி ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தமழர்களுக்கு சார்பாக நடந்துகொள்ளும் ஒரு அரசியல் வாதி என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி அவருக்கெதிராகவும் தமிழ் மக்களுக்கெதிராகவும் ஒரு மாய இனவாத வலையை விரிக்க நினைக்கும் காரணத்தினாலையே ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க ஆட்சியில் இருக்கும் காலத்தில்தான் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன, அழிக்கப்பட்டுள்ளன.

ரணில் விக்கிரம சிங்கவின் ஆட்சியில் வேண்டியமை செய்யலாமென்ற நம்பிக்கை உள்ளதால் தமிழ் அடிப்படை வாதிகள் பௌத்த மரபுரிமைகளை அழிக்கிறார்கள் என்ற விஷமத்தன மான பிரச்சாரத்தை தெற்கில் பரப்பி ஒரு இனவாத முரண்பாடுகளை உருவாக்கும் சூத்திரத்தை தென்னிலங்கை சக்திகள் மிக கச்சிதமாக மேற்கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டாலும் அதை முறையடிக்கும் செயல் திட்டத்தை தமிழ் தரப்பினர் வகுக்க முடியவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிநு;து கொள்ளக்கூடிய விடயம். இதுவரை காலமும் அரசியல் மயப்பட்ட முரண்பாடுகளை தோற்றுவித்த தென்னிலங்கை சக்திகள் தற்போது பௌத்த மரபுரிமை என்ற ஆயிதத்தை கையில் எடுத்திருப்பது நாட்டின் ஆபத்தான போக்கையே எடுத்து காட்டுகிறது.

திருமலை நவம்.

Exit mobile version