Site icon Tamil News

இலங்கை கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு விசேட தகவல்

இலங்கை கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியின் ஒரு பகுதியாகவே இணையவழி கடவுச்சீட்டு விண்ணப்ப முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய செயல்முறையானது கடவுசீட்டு விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்துவதையும், 3 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்களின் குடியிருப்புகளுக்கு அவற்றை விநியோகிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடவுச்சீட்டுகளை வினைத்திறனாக வழங்குவதற்கு வசதியாக, நாடளாவிய ரீதியில் உள்ள 50 பிராந்திய செயலகங்கள் தேவையான வசதிகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அருகிலுள்ள பிராந்திய செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் தபால் பொதி சேவையூடாக அவை உரிய நபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

www.immigration.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று, கடவுசீட்டுக்காக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தின் மென்பிரதியை தரவேற்ற முன்னர் , விண்ணப்பதாரர்கள் விரைவுபடுத்தப்பட்ட ‘3 நாள் சேவையை’ விரும்புகிறீர்களா அல்லது நிலையான ’02 வார சேவையை’ விரும்புகிறீர்களா என்பதைக் குறிப்பிட வேண்டும்.

இதைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் கைரேகைகளை வழங்குவதற்காக தங்கள் பிரதேச செயலகத்திற்குச் செல்ல வேண்டும் மற்றும் இலங்கை வங்கி வழங்கும் இணையதள முறைமையின் மூலம் தேவையான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

வீட்டிலேயே செயல்முறையை நிறைவு செய்ய முடியாதவர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட ஸ்டுடியோவிற்குச் சென்று தேவையான ஆவணங்களைப் பெறவும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முடியும்.

பிரதேச செயலகத்திற்குச் சென்று கைரேகைகளை வழங்கியதன் பின்னர் இணையத்தளத்தில் பணம் செலுத்துவதில் தனிநபர்கள் சிரமங்களை எதிர்கொண்டால், மாற்றுக் கட்டண வசதிகள் உள்ளன.

அவர்களின் கைரேகைகளை சமர்ப்பித்த பின்னர், பிரதேச செயலகம் இலக்கமொன்றை வழங்கும். அதை இலங்கை வங்கிக்கு வழங்க முடியும். செலுத்த வேண்டிய தொகை பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு மாற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version