Site icon Tamil News

சட்டவிரோத செயல்களை தடுக்க தவறுவதனாலே தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற முனைகின்றார்கள்- ரவிகரன் குற்றச்சாட்டு

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தவறுவதனாலே தமிழர் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேற முனைகின்றார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.கொக்குதொடுவாய் 15 ஆம் கட்டை பகுதியில் குடியேற்ற முயற்சி இடம்பெறுவதாக அப்பகுதி மீனவர்களால் தெரிவிக்கப்பட்டதனையடுத்து இன்று நேரில் களவிஜயம் மேற்கொண்டு அவ் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

ஏற்கனவே புலிபாய்ந்தகல் அதனோடு சேர்ந்த பகுதிகளிலும் அத்துமீறி தொழில் மேற்கொண்டிருந்ததனை சுட்டிக்காட்டி பிரதேச செயலகத்திற்கு அறிவித்திருந்தோம். அதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதேச செயலகத்தினால் தகவல் வழங்கி இருந்தார்கள்.இந்நிலையில் கொக்குதொடுவாய் வடக்கு கடற்தொழில் சங்க தலைவருக்கு எதிராக குறித்த பகுதியில் தொழில் செய்யும் நபர் ஒருவரால் குறித்த இடத்தில் தாம் தொழில் மேற்கொள்வதிலிருந்து அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாடு போடப்பட்டமையடுத்து கொக்குளாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.

அவர்கள் பொலிஸ் நிலையத்தில் கூறும்போது புத்தபிக்கு தங்களுக்கு தந்த இடம் எனவும் , இந்த இடத்தினை எடுத்து விட்டோம். ஆகவே வாடி போட்டு தொழிலினை மேற்கொள்வோம் என்ற வகையில் கடற்தொழில் சங்க தலைவரோடு கதைத்திருக்கிறார்கள்.நீரியல் வள திணைக்களத்தினர் சட்டவிரோத நடவடிக்கைகளை எடுக்க முனைவதில்லை. இவ்வாறான நிலையில் தான் குடியேற்றங்களை இலக்கு வைத்து புலிபாய்ந்தகல் தொடக்கம் இப்பகுதிவரை சிங்கள மக்கள் குடியேறி தமிழ் மக்களை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்ட வடிவத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு இருக்கையில் நாங்கள் இவ்விடத்திலுள்ள வாடிக்கு அருகே சென்று பார்த்த போது அவர்கள் வைத்திருந்த சட்டவிரோதமான சுருக்கு வலையினை மூடி விட்டு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார்கள். பட்டப்பகலிலே சுருக்கு வலையினை கொண்டு தொழில் செய்யும் நடவடிக்கைகள் இவ்விடத்தில் அரங்கேறி கொண்டு இருக்கின்றது.முல்லைத்தீவில் கடற்தொழில் திணைக்களம் என்னத்திற்காக இருக்கிறார்கள்? சட்டவிரோத நடவடிக்கைகளை பார்ப்பதற்கா? அல்லது சட்டவிரோத தொழிலை ஊக்குவிப்பதற்கா? கொக்குளாய் தொடக்கம் பேய்ப்பாறைப்பிட்டி வரையான இடங்களை முல்லைத்தீவு கடற்தொழில் திணைக்களம் கடல்சார் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியது அவர்களது பொறுப்பு. வேலைகளை செய்யாது சம்பளம் எடுக்கவா இங்கே இருக்கிறார்கள்.

சரியான சட்டதிட்டங்களுக்கு அமைய பதிவு செய்து அந்த பதிவுகளின் மூலமாக தொழில் செய்பவர்களை தவிர அத்துமீறி குடியேறி தங்கள் குடும்பங்களை கொண்டு வந்து குடியேற்றி இந்த இடங்களை அழிக்க வேண்டும். அல்லது தமிழ் மக்களை துரத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்படும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.இவ்வாறான நடவடிக்கைகளை விட்டு உங்களுடைய இடங்களுக்கு செல்லுங்கள். இங்கே வந்து சட்டவிரோத தொழில், குடியேற்ற முயற்சி ஊக்குவிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என்பதை கேட்டு கொள்கிறேன் . இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் கதைக்க இருக்கின்றேன். அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் மக்களதும் எமது கோரிக்கையுமாக உள்ளது என மேலும் தெரிவித்தார்.

Exit mobile version