Site icon Tamil News

ஈரானின் உதவியுடன் டிரோன் தொழிற்சாலை அமைக்கும் ரஷ்யா – வெள்ளை மாளிகை தகவல்

உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனின் பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா முயற்சித்து வருகிறது.

தற்போது இரு தரப்பிலும் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள ரஷ்யப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் டிரோன்கள், தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் ஈரான் உதவியுடன் ரஷ்யா டிரோன் தொழிற்சாலை கட்டிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபகரணங்களை ஈரான் வழங்கி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உளவுத்துறை மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போருக்காக ஈரான்- ரஷ்யா டிரோன் தயாரிப்பில் ஈடுபடலாம் என கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டிந்தார். ஆனால், உக்ரைன் மீதான போர் தொடங்குவதற்கு முன் ரஷ்யாவுக்கு டிரோன் வழங்கி வந்ததாகவும், தற்போது டிரோன்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version