Tamil News

போரில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, அதிபர் ஜெலென்ஸ்கி அஞ்சலி

உக்ரைன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கீவ் நகரில் அந்நாட்டு அதிபர் விலாதிமிர் ஜெலன்ஸ்கியுடன் இணைந்து, போரில் உயிர்நீத்த குழந்தைகளின் நினைவிட பகுதியில் அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டுக்குச் சென்றுள்ளார். போலந்து தலைநகர் வார்சாவில் இருந்து ரயில் மூலம் இன்று (ஆக.23) காலை தலைநகர் கீவ் சென்றடைந்தார். உக்ரைன் உயரதிகாரிகள், பிரதமர் மோடியை ரயில் நிலையத்துக்கு வந்து வரவேற்றனர். மேலும், அங்குள்ள இந்தியர்கள் தேசியக் கொடியுடன் கூடி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, ஜெலன்ஸ்கி, மோடியை ஆரத்தழுவி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இருவரும் தியாகிகள் நினைவிடத்தில் போரில் உயிர்நீத்த குழந்தைகளின் நினைவாக அஞ்சலி செலுத்தினர். ஜெலன்ஸ்கின் தோல்களில் கைகளைப் போட்டவாறு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர். முன்னதாக நேற்று (ஆக.22) போலந்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் நம் அனைவருக்கும் ஆழ்ந்த கவலை அளிக்கும் விஷயமாகும். போர்க்களத்தில் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்பது இந்தியாவின் உறுதியான நம்பிக்கை.

PM Modi hugs Zelenskyy as he meets him in Ukraine - India Today

எந்தவொரு நெருக்கடியிலும், அப்பாவி மக்களின் உயிர் இழப்பு ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதற்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர செயல்பாடுகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இதற்காக, இந்தியா, அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளது” என தெரிவித்திருந்தார்.

அதற்கும் முன்பாக இந்தியாவில் இருந்து புறப்படும் முன் கடந்த 21ம் திகதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு நான் பயணம் செய்ய இருக்கிறேன். உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் செய்வது இதுவே முதன் முறையாகும். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், தற்போதைய உக்ரைன் மோதலுக்கு அமைதி தீர்வு காண கண்ணோட்டங்களை பகிர்ந்து கொள்வதற்கும் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான உரையாடல் வாய்ப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன். நண்பர் மற்றும் கூட்டாளி என்ற முறையில் இந்தப் பிராந்தியத்தில் அமைதியும், நிலைத்தன்மையும் விரைவில் திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி போலந்தில் இருந்து செல்வதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போலந்து பிரதமர் டானால்ட் டஸ்க், “அமைதியான முறையில், சரியான முறையில், உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வர தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். இந்தியா இன்றியமையாத மற்றும் மிகவும் ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்த அறிவிப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. உங்களின் உக்ரைன் பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version