Site icon Tamil News

இலங்கை முழுவதும் மின்தடை அதிகாலையே வழமை நிலை! இரவு முழுக்க பொலிஸ் உஷார்

தலைநகர் கொழும்பு உட்பட நாடு முழுவதும் தீடீரென ஏற்பட்ட மின் தடையால் குழப்பம் நிலவியது.

கொழும்பு நேரப்படி நேற்று மாலை ஐந்து மணியளவில் ஏற்பட்ட மின் தடை இன்று அதிகாலை வரை நீடித்தது. அதன்பிறகே படிப்படியாக அனைத்துப்பகுதிகளிலும் விநியோகம் வழமைக்குத் திரும்பியது.

அரசுக்குச் சொந்தமான மின்சார சபை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி கொத்மலை முதல் பியகம வரையான பிரதான நீர்மின் வழங்கும் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட சீர்குலைவே நாடு முழுவதுக்குமான மின் தடை ஏற்படக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மின் விநியோகத்தை மீளச் சீராக்கும் பணிகள் இன்று அதிகாலை முதல் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப் படுவதாக மின்சார சபையின் செய்தித் தொடர்புப் பொறியியலாளர் நொயல் பிரியந்தசெய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தார்.

எதிர்பாராத மின் தடை நாடு முழுவதும் பொது மக்களினதும் பொதுச் சேவைகளினதும் வழக்கமான பணிகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது எனச் செய்திகள் தெரிவித்தன.

பாரிய மின்தடையை அடுத்து அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நாட்டில் உள்ள சகல பொலீஸ் நிலையங்களுக்கும் நேற்றிரவு உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது.

பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அந்த உத்தரவை விடுத்திருந்தார் என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டு அதிலிருந்து மெல்ல மீண்டுவருகின்ற சமயத்தில் இவ்வாறு நாடளாவிய மின்தடை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

 

Exit mobile version