Tamil News

தேர்தல் அறிவிப்பு.. அடுத்தடுத்து தள்ளிப்போகும் படங்களின் வரிசையில் இவ்வளவு இருக்கா?

நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 19 துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கவுள்ளது.

இந்த தேர்தல்களின் வாக்குகள் ஜூன் 4ம் தேதி நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அட்டவணையுடனேயே 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த தேர்தல் அறிவிப்பை திரைத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தல் தேதிகளையொட்டி அடுத்தடுத்த முன்னணி படங்களின் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழுவினர் காத்திருந்தனர். கடந்த ஜனவரி மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட விக்ரமின் தங்கலான் படத்தின் ரிலீசும் மக்களவை தேர்தலையொட்டி அறிவிக்கப்படும் என்று முன்னதாக படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படம் மே மாதத்தில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 AD படங்கள், தனுஷின் ராயன் உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதிகள் அடுத்தடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தங்கலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டிரைலர் உள்ளிட்ட மற்ற அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஏப்ரல் மாதத்தில் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் ரிலீசாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தேர்தலையொட்டி இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக உள்ளது. இந்தியன் 2 படமும் ஏப்ரல் 19ம் தேதியை அடுத்து தன்னுடைய ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே கமல் -பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள கல்கி 2898 AD படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகவுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வரும் மே மாதம் 13ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் மே மாதம் 9ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவிருந்த கல்கி 2898 AD படத்தின் ரிலீசும் தள்ளிப் போகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சியின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 4 படமும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பிற்காக காத்திருந்த கவினின் ஸ்டார் மற்றும் பாலாவின் வணங்கான் படங்களின் ரிலீஸ் அப்டேட்டும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version