Site icon Tamil News

அங்கஜனின் தந்தைக்கு மதுபான சாலை உரிமம்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது தந்தையான சதாசிவம் இராமநாதனை பினாமியாக வைத்து மதுபானசாலைக்கான அனுமதியை கிளிநொச்சியில் பெற்றார் என குற்றஞ்சாட்டினார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மதுவரி திணைக்களத்திற்கு அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் எழுதியதாக தெரிவித்த கடிதமொன்றையும் வெளிப்படுத்தினார்.

இதேவேளை அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதாகவும், மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழருக்கு எதிரானவர்களை சங்கறுக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இதேவேளை சுத்துமாத்து சுமந்திரன், சிறுவன் சாணக்கியன் ஆகியோரையும் பொருட்டாக எடுக்கத் தேவையில்லை.

எதிர்வரும் காலங்களில் அவர்களும் காணாமல் போய்விடுவர் என்றார்.

ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலரும் ரணிலுக்கு ஆதரவளிக்க மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளனஎன குற்றச்சாட்டை வெளியிட்டிருந்தார்.

இதேவேளை தயாசிறி ஜயசேகரவின் கருத்தை மறுத்த அங்கஜன் இராமநாதன், ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படாமல் தேர்தல் காலங்களில் சேறுபூசப்படுவதாக விசனம் வெளியிட்டிருந்த நிலையில் தம்பிராசா ஆதாரங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

Exit mobile version