Site icon Tamil News

கொடைக்கானல் – திடீரென பற்றி எரிந்த கார்… அதிர்ஷ்டவசமாக தப்பிய அறுவர்!

கொடைக்கானல் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் சென்ற கார் ஒன்று திடீரென தீப்பிடித்து உருத்தெரியாமல் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, இன்று புனித வெள்ளி தினத்துக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதால், வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக மக்கள் சுற்றுலாதளங்களுக்கு படையெடுத்துள்ளனர்.

அந்த வகையில் பொள்ளாச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு 6 பேர் சொகுசு கார் ஒன்றில் சுற்றுலா சென்றனர். இன்று பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் சவரிக்காடு பாதையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். கோம்பைக்காடு என்ற பகுதி அருகே வந்தபோது, இன்ஜினில் இருந்து புகை வருவதை கண்ட 6 பேரும் உடனடியாக காரில் இருந்து இறங்கி உள்ளனர்.

அப்போது திடீரென கார் முற்றிலும் பற்றி எறியத் துவங்கியுள்ளது. இது தொடர்பாக பழனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே கார் முற்றிலும் எரிந்து கரிக்கட்டையானது.

புகை எழுவதை கண்டவுடன் 6 பேரும் காரை விட்டு இறங்கியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த நிலையில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version