Tamil News

சிரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு! 23 பேர் பலி

கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்ட தாக்குதலில் குறைந்தது 23 சிரிய வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் கிழக்கு டெய்ர் அல்-ஸூர் மாகாணத்தில் உள்ள இராணுவப் பேருந்தை ஜிஹாதிகள் சுற்றி வளைத்ததாக ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் 10 க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காணவில்லை என்று கூறப்படுகிறது.

ஐ.எஸ் தீவிரவாதிகளால் இந்த ஆண்டு நடந்த மிக மோசமான தாக்குதல் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

சிரியாவிலும், ஈராக்கிலும் நிலவி வந்த ஒரு ஸ்திரமற்ற அரசியலினால் 2011-லிருந்து ஐ.எஸ். அமைப்பு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. சிரியாவில் இந்த அமைப்பினருக்கெதிராக அமெரிக்கா களமிறங்கியதை தொடர்ந்து 2018-ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சியில் இந்த அமைப்பு பெருமளவு அழிக்கப்பட்டது.

2019-ல் அந்த அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து இதன் ஆதிக்கம் சிரியாவில் முழுவதுமாக முடிவுக்கு வந்தது.

ஆனாலும் சிறிய அளவில் அதன் ஆதரவாளர்கள் ஆங்காங்கே மறைந்து வாழ்ந்து அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும் எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சிரியா நாட்டு வீரர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சிரியாவின் கிழக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்பேருந்து சிரியா- ஈராக் எல்லைக்கருகே உள்ள டெய்ர் எல்-ஜவுர் (Deir el-Zour) பிராந்தியத்திலுள்ள கிழக்கு சிரியாவின் மயதீன் (Mayadeen) நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது இப்பேருந்தை வழிமறித்து திடீரென சூழ்ந்து கொண்ட துப்பாக்கி ஏந்திய கும்பல் அதன் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 23 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும், சிரியாவில் இயங்கி வரும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகளுக்கான அமைப்பு தெரிவிக்கிறது.

சிரியாவின் ராணுவமோ, அரசாங்கமோ இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

 

Exit mobile version