Site icon Tamil News

சென்னையிலிருந்து டெல்லி செல்ல தயாரான விமானத்தில் இயந்திர கோளாறு – பயணிகள் தவிப்பு

சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு. இதனால் டெல்லி செல்லும் விமானம் தாமதமாகி, 164 பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக, சென்னை விமான நிலையத்தில் தவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு, டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 164 பயணிகள் டெல்லி செல்வதற்காக, அதிகாலை 5 மணிக்கு முன்னதாகவே, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டனர். பயணிகள் பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். ஆனால் அந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.

இதை அடுத்து பயணிகள் யாரும் விமானத்தில் ஏற்றப்படவில்லை. விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் விமான பொறியாளர்கள் விமானத்துக்குள் ஏறி விமான இயந்திரங்களை பழுது பார்க்கும் முயற்சியின் ஈடுபட்டுள்ளனர். விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்ட பின்பு, விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version