Site icon Tamil News

தேர்வு தோல்வியால் 9 மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு..!

ஆந்திராவில் 9 மாணவர்கள் தேர்வில் தோல்வியுற்றதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த தேர்வில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினார்கள். இந்நிலையில், கடந்த புதன்கிழமை 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முதலாம் ஆண்டு தேர்ச்சி சதவீதம் 61 ஆகவும், 2ம் ஆண்டு தேர்ச்சி சதவீதம் 72 ஆகவும் இருந்தது.

இந்தத் தேர்வில் தோல்வி அடைந்த, தருண் (17) என்ற மாணவர் ஸ்ரீகாகுளம் மாவட்டம், தெக்கலி அருகே ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். விசாகப்பட்டினம் மாவட்டம், திரிநாதபுரத்தில் தன் வீட்டில் 16 வயது சிறுமி தேர்வு தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், ஏ.அகிலஸ்ரீ மாணவியும் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

கஞ்சரபாலம் பகுதியில் ஜெகதீஷ் (18) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அனுஷா (17) என்ற மாணவி தேர்வு தோல்வியால் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பாபு (17) என்ற மாணவர் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். டி.கிரண் (17) என்ற மாணவர் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து காவல் துறையினரும், மனநல மருத்துவர்களும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 9 மாணவர்கள் தேர்வு தோல்வியுற்றதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version