Site icon Tamil News

தலை மற்றும் கைகால்கள் இல்லாத நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

களனி ஆற்றங்கரையில் தலை மற்றும் கைகால்கள் இல்லாத பெண்ணொருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களாக காணாமல் போன டி.ஜி.பிரதீபா என்ற 51 வயதுடைய பெண்ணின் சடலம் இன்று பிற்பகல் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

கடந்த 27ஆம் திகதி காலை முதல் காணவில்லை என குறித்த பெண்ணின் மகள் முல்லேரிய பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், CCTV தரவு சோதனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் நடத்தியதுடன், குறித்த பெண் இறுதியாக காணப்பட்ட சியம்பலாப்பே பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரின் கார் இலக்கத்தின் தகவலை வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சியாம்பலாப்பே பகுதியில் உள்ள வர்த்தகருக்கு சொந்தமான கைவிடப்பட்ட வீடொன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, ​​அறையொன்றினுள் நீளமான முடி மற்றும் இரத்தக் கறைகளும், வீட்டின் வெளியே பகுதியளவு எரிந்த நிலையில் இரத்தக் கறையுடன் கூடிய பெண்களின் ஆடைகளின் பாகங்களும் காணப்பட்டன.

இது தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று பிற்பகல் விசாரணைகளை மேற்கொண்ட போது, ​​குறித்த வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள களனி ஆற்றங்கரையில் தலை மற்றும் கைகால்கள் இல்லாத பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டி.ஜி.பிரதீபாவின் உறவினர் இன்று சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

அவருடன் நெருங்கிய உறவை கொண்டிருந்த நபரை கைது செய்ய பொதுமக்களின் ஆதரவு கோரப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

தற்போது 55 வயதான சுதீர வசந்தவுக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரிய பொலிஸார் மற்றும் சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version