Site icon Tamil News

ஜப்பானில் பெருவெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி அறுவர் மரணம்

மத்திய ஜப்பானில் ஏற்பட்ட கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகத் தகவல் ஒன்று திங்கட்கிழமை (செப். 23) தெரிவித்தது.

எட்டுப் பேர் காணாமல் போன நிலையில் அறுவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டாலும் இன்னும் இருவரின் கதி என்னவென்று தெரியவில்லை என ஜப்பானியக் கடலோர இஷிகாவா மாநில அரசாங்கம் கூறியது.

சனிக்கிழமை முதல் பெய்த கனமழையால் இஷிகாவாவில் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. அங்குள்ள விஷிமா நகரில் 72 மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையின் அளவு 540 மில்லிமீட்டர் எனப் பதிவானது.

மழை ஓய்ந்த பின்னர் 4,000 வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியதாக ஹோகுரிகு மின் விநியோக நிறுவனம் கூறியது.

நிலச்சரிவுகள் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டதால் 100க்கும் மேற்பட்ட வட்டாரங்கள் தனித்தீவுகள் போல தொடர்பறுந்து இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த 7.5 ரிக்டர் நிலநடுக்கத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில் இஷிகாவாவை வெள்ளமும் நிலச்சரிவுகளும் சீரழித்து வருகின்றன.

Exit mobile version