Tamil News

சர்வதேச விசாரணை மைத்திரிபாலவுக்கா? ISIS தீவிரவாதிகளுக்கா? – ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி

ஈஸ்ரர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுக்கா அல்லது ISIS தீவிரவாதிகளுக்கா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (15) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டிய அவர் மேலும் கூறுகையில்,
தென்னிலங்கை பெரும்பான்மையின தலைவர்கள் சர்வதேச விசாரணையை கோருவது என்பது தேர்தலுக்கான யுத்தியே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரங்களையோ அல்லது காரணமானவர்களை கண்டறிவதற்கோ அல்ல.

மாறாக 2019ம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற ஈஸ்ரர் தாக்குதல் தொடர்பாக ISIS தீவிரவாதிகள் தமது உத்தியோகபூர்வ இணையத்தில் தாங்கள்தான் அதை மேற்கொண்டதாக உரிமை கோரிய பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து இன்று சர்வதேச விசாரணையை கோருவதென்பது சர்வதேச தீவிரவாதிகளான ISIS தீவிரவாதிகள் மீதா அல்லது அன்றைய ஆட்சியிலிருந்த மைத்திரிபால சிறிசேன மீதா என்பதை மக்களுக்கு அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதலின் பின்னர் சர்வதேச தீவிரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என அமெரிக்காவினதும் ஏனைய சர்வதேச நாடுகளின் முடிவாகவும் அமைந்திருந்தது.ஆயினும் அதை முற்றாக ஒழிக்கமுடியாமல் பன்னாட்டு படைகள் இன்று தொடர்ந்தும் போராடி வருகின்றன. இந்த சூழலில் இலாமிய தீவிரவாதிகளான ISIS தீவிரவாதிகள் இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு உரிமை கோரிய பின்னர் சர்வதேச விசாரணை என்பது ISIS தீவிரவாதிகளை நோக்கியதாகவே பார்க்கவேண்டி உள்ளது.

ஆனால் 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைவதால் வாக்கு வங்கிகளை கருத்தில் கொண்ட அரசியல் பிரமுகர்கள் இவ்வாறு முணுமுணுக்க தொடங்கியுள்ளனர் என்பதே உண்மை.அதுமட்டுமல்லாது 1983 ஜுலை கலவரம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர் ஆட்சியில் இடம்பெற்றபோது அன்று ஜே.ஆர் குற்றவாளியாக வர்ணிக்கப்பட்டார்.அதன்பின்னர் பிரேமதாச ஆட்சியில் நடந்த அநீதிகளுக்கு பிரேமதாச குற்றவாளியாக வர்ணிக்கப்பட்டார். அதன்பின்னர் வடக்கில் நடந்த சூரியக்கதிர் நடவடிக்கை அழிவுகளுக்கு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குற்றவாளியாக வர்ணிக்கப்பட்டார்.

Sri Lanka attacks: The family networks behind the bombings - BBC News

அதன்பின்னர் மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான அழிவகளுக்கு மஹிந்த ராஜபக்ச குற்றவாளிகாக வர்ணிக்கப்பட்டார்.அதன்படி பார்த்தால் ஈஸ்ரர் குண்டு தாக்குதலுக்கு அன்ரைறய ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன குற்றவாளியாக வர்ணிக்கப்பட்ட வேண்டியதுதான் ஜதார்த்தம்.அவ்வாறல்லாமல் சர்வதேச விசாரணை என்று வலியுறுத்த முனைவது 2024 ஆண்டுக்கான தேர்தலுக்காக ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

சர்வதேச விசாரணைகளை சரி பிழைகளுக்கு அப்பால் கோரப்பட்டபோது அன்று மௌனம் சாதித்த தென்னிலங்கை தலைவர்களும் ஐநாவில் இலங்கைக்கு கால அவாசம் பெற்றுக் கொடுக்க உழைத்த தமிழ் தலைவர்களும் தேர்தல் கனவை வைத்து இன்று கருத்துக்கள் கூற முனைவது மக்கள் நலன் சார்ந்ததற்கு மாறாக தமது பதவி நலன்கள் சார்ந்ததாகவே இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version