Site icon Tamil News

பப்புவா நியூ கினியாவில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் ஆஸ்திரேலியா அருகே பப்புவா நியூ கினியா என்ற தீவு அமைந்துள்ளது. நில அமைப்பின்படி இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இதனால் மக்கள் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை உணர்வு உடனேயே இருப்பார்கள். அங்குள்ள கட்டிடங்களும் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், கடந்த 2018-ம் ஆண்டில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 125 பேர் பலியாகினர். இந்த நிலையில் கடந்த மாதம் 23ம் திகதி அங்கு மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் குறித்த அறிகுறிகளை உணர்ந்ததுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டதால் பெரிய அளவில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை.

இந்த நிலையில் இன்று காலை 6.56 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கினியாவில் 98 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக் கொண்டு சாலைக்கு ஓடி வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.

பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதன் பாதிப்புகள் குறித்த முழு விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக தகவல் இல்லை. இதுபோன்று அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால் அந்த தீவின் மக்கள் இனம்புரியாத அச்சத்தில் உள்ளனர்.

Exit mobile version