Site icon Tamil News

இறந்து 2 நாட்களான பசுமாட்டை இறைச்சிக்காக எடுத்துச் சென்ற அவலம்!- மடக்கி பிடித்த பொலிஸார்

கும்பகோணத்தில் உயிரிழந்து 2 நாட்கள் ஆன பசுமாட்டை ஹோட்டல்களுக்கு கறிக்காக விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்ததை அடுத்து பசுமாட்டின் உடலை பொலிஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அடுத்த நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொலிஸார் இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆகாச மாரியம்மன் கோயில் பகுதியில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை இட்டனர். அப்போது இறந்து இரண்டு நாட்களான பசு மாடு ஒன்றை, கோரைப் புற்களைப் போட்டு மறைத்து கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மினி வேன் ஓட்டுநர், உட்பட இருவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த பொலிஸார் வாகனத்துடன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது உயிரிழந்த பசுமாட்டை விலைக்கு வாங்கி கும்பகோணத்திற்கு கொண்டு சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. மேலும் அங்கு இந்த பசுமாட்டின் கறியை வெட்டி அதனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொலிஸார் இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு படையினர், உயிரிழந்த பசுமாட்டின் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கும்பகோணத்தில் உள்ள எந்தெந்த உணவுகளுக்கு இதுபோன்று உயிரிழந்த பசு மாடுகளின் உடலை வெட்டி கறியை விற்பனை செய்து வந்தனர் என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவு பாதுகாப்பு துறையினர் உயிரிழந்த மாட்டை புதைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மாட்டு இறைச்சி கறிக்காக, பசு மாடுகள் மற்றும் இளம் கன்றுகளை கொல்லக்கூடாது என்பது விதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version