Site icon Tamil News

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் பாலஸ்தீனியர்கள் 68 பேர் பலி!

காசாவில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 68 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 77 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காசாவில் உள்ள முக்கிய இடங்களான ரஃபா, பெஸ்ட் பேங்க் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து தாக்கி வருகிறது. குறிப்பாக, வெஸ்ட் பேங்கில் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேலிய ராணுவத்தினர் புதன்கிழமையன்று அப்பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் 18 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.

அதே வேளையில், கிழக்கு ரஃபாவில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் நடந்த தாக்குதலில் நான்கு பாலஸ்தீன போராளிகளை இஸ்ரேலியப் படைகள் கொன்றன. வெஸ்ட் பேங்கில் கடந்த 20 ஆண்டுகளில் இஸ்ரேல் நடத்தும் மிகப் பெரிய தாக்குதல் இது என கருதப்படுகிறது.

இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 68 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 77 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது வரை காசா மீதான இஸ்ரேலின் போரில் 40,602 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 93,855 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களின் போது இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்தும் எதிர்வினைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் கண்டித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் இனப்படுகொலைகள் தண்டிக்கப்படாமல் இருக்கக் கூடாது என பெல்ஜியத்தின் துணைப் பிரதமர் பெட்ரா டி சுட்டர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version