Site icon Tamil News

விமான பயணி போதையில் ரகளை

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து, சிங்கப்பூர் நாட்டுக்கு துருக்கி ஏர்லைன்ஸ் பயணிகள்  விமானம், இன்று மாலை சென்று கொண்டிருந்தது.

அதில், 318  பயணியகள் பயணித்து கொண்டிருந்தனர். சிங்கப்பூரைச் சேர்ந்த மெல்னிக் யூரி (30) என்பவரும் அந்த விமானத்தில் பயணித்துக் கொண்டு இருந்தார்.

விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, பயணி மெல்னிக் யூரி போதையில் சக பயணிகளிடம் ரகளை செய்துள்ளார். உடனே விமான பணிப்பெண்கள், போதை பயனியை அமைதி படுத்த முயன்றனர்.

ஆனால் பயணி விமான பணிப்பெண்களையும் தரக்குறைவாக பேசி, ரகளையில் ஈடுபட்டார். இதை அடுத்து விமான பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் புகார் செய்தனர்.

தலைமை விமானி, போதை பயணிக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்தார். ஆனாலும் பயணி தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. இதை எடுத்து விமானி, விமானத்தை அவசரமாக ஏதாவது ஒரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கி, போதைப்பயணியை விமானத்திலிருந்து இறக்கி விட முடிவு செய்தார்.

அப்போது அந்த விமானம்  சென்னை வான்வெளியை கடந்து கொண்டு இருந்தது. இதை அடுத்து உடனடியாக விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு,

அவசர காரணத்துக்காக விமானத்தை, சென்னையில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு,

அவர்கள் அனுமதியுடன் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், சென்னையில் தரையிறங்க அனுமதித்தனர்.

இதன்படி சென்னை விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறங்கியது. உடனடியாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி,

விசாரணை நடத்தினர். அப்பொது போதையில் இருந்த சிங்கப்பூர் பயணியை, விமான கேப்டன், சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

அவர்கள் அந்தப் பயணியை விமானத்திலிருந்து கீழே இறக்கி, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அலுவலகத்தில் தங்க வைத்தனர். அதன்பின்பு துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் மீதி 317 பயணிகளுடன் சென்னையில் இருந்து, சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட அந்தப் போதை பயணிக்கு, இந்திய விசா இல்லாததால், அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியில் அனுப்ப எனவே விமான நிலையத்திலேயே வைத்து,

அந்த பயணிக்கு போதையை தெளிவைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி பயணி போதை தெளிந்ததும், நள்ளிரவு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் தனியார்  பயணிகள் விமானத்தில்,அந்தப் பயணியை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர்.

போதை பயணி ரகளையால், துருக்கி நாட்டிலிருந்து சிங்கப்பூர் சென்ற  பயணிகள் விமானம், அவசரமாக சென்னையில் தரையிறங்கிய சம்பவம்,சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version