Site icon Tamil News

வித்தியா கொலை வழக்கில் பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு விசாரணை

கடந்த 2015ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டுப் பலாத்காரம் மற்றும் படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று (மார்ச் 20) நீதியரசர்களான ப்ரீதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதி பெஞ்ச், மேன்முறையீட்டு மனுக்களை ஒக்டோபர் 06ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதான குற்றவாளியான “சுவிஸ் குமார்” உட்பட தொடர்புடைய வழக்கின் பிரதிவாதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

18 வயது பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கடத்தல், கூட்டுப் பலாத்காரம் மற்றும் படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், வழக்கின் பிரதான சந்தேகநபர் சுவிஸ்குமார் உள்ளிட்ட 07 பேருக்கு மரண தண்டனை விதித்து 2017 செப்டெம்பர் 27ஆம் திகதி தீர்ப்பளித்தது.

பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததை அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பை வழங்கிய மூவரடங்கிய நீதியரசர் பெஞ்ச், 07 சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை விதித்ததுடன்,பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 1 மில்லியன் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

மரண தண்டனைக்கு மேலதிகமாக, சந்தேகநபர்களுக்கு மேலும் 30 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவைச் சேர்ந்த 18 வயது பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

 

Exit mobile version