Site icon Tamil News

நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த பிரபஞ்சனின் வெற்றியின் ரகசியம்

நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்த விழுப்புரத்தை சேர்ந்த பிரபஞ்சன், தனது வெற்றியின் ரகசியம் குறித்து தெரிவித்து இருக்கிறார்.

இன்று இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 720க்கு 720 மதிப்பெண்களை எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர். முதல் முறையாக நீட் தேர்வை எழுதி இந்த சாதனையை அவர் படைத்து உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்ஓலக்கூர் கிராமத்தை சேர்ந்த பிரபஞ்சன் சென்னையில் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்ததுடன், நீட் பயிற்சி மேற்கொண்டு வந்து இருக்கிறார்.

அவரது பெற்றோர் செஞ்சியில் அரசு பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார். தனியார் பள்ளியில் படித்து வந்த இவர் முதல் முயற்சியிலேயே சாதித்து இருக்கிறார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “நான் இந்த ஆண்டுதான் 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதினேன். முதல் முறை நீட் தேர்வை எழுதி இருக்கிறேன்.

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மிகுந்த உற்சாகமாக உள்ளது. இதுபோன்ற அனுபவத்தை நான் இதற்குமுன் உணர்ந்தது இல்லை. இதுவே முதல்முறை.

அம்மா, அப்பா இருவருமே அரசுப் பள்ளி ஆசிரியர்களாக உள்ளார்கள். செஞ்சியில் எங்கள் ஊருக்கு அருகிலேயே அவர்கள் வேலை செய்கிறார்கள். எனக்கு சிறுவதில் இருந்தே இது கனவு கிடையாது. 8, 9 ஆம் வகுப்பு படிக்கும்போது என உயிரியல் படிப்பு பிடிக்கும். எனவே மருத்துவம் படிக்கலாம் என்று முயற்சித்தேன்.

3 அல்லது 4 முறை நீட் தேர்வு எழுதுகிறோம் என்பது அவரவர் கருத்து. அவர்களின் சூழலுக்கு ஏற்பவே எடுப்பார்கள். அவர்களுக்கே தெரியும்.. அடுத்த முறை தேர்வெழுதினால் எடுப்போமா, மாட்டோமா என்று. நான் தினமும் அதிகம் படிப்பேன். எனக்கு 2 வாய்ப்புகள் உள்ளது. ஜிப்மர் அல்லது டெல்லி எய்ம்ஸில் படிக்கலாம் என்று விரும்புகிறேன். இன்னும் முடிவெடுக்கவில்லை.

விரைவில் கலந்தாய்வு தொடங்கிவிடும். நான் 12 ஆம் வகுப்பு சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன்.

அந்த பள்ளியிலேயே நீட் பயிற்சியும் எடுத்தேன். நான் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாநில பாடத்திட்ட புத்தகத்தை நான் பார்த்தது இல்லை. என்சிஆர்டி புத்தகத்தில் இருந்துதான் நீட் தேர்வில் கேள்விகள் வருகின்றன. அதை பார்த்தால்தான் சொல்ல முடியும்.” என்றார்.

 

Exit mobile version