Site icon Tamil News

தென் சீனக் கடல் பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்!

தென் சீனக் கடல் பகுதியிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்றுக்கு தான் எச்சரிக்கை விடுத்ததாக சீன இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் ஏறத்தாழ முழுப்பகுதிக்கும் சீனா உரிமை கோருகிறது. சர்வதேச நீதிமன்றம் இதை நிராகரித்து தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்நிலையில் சர்வதேச கடற்பரப்பில் சுயாதீன கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்காக எனத் தெரிவித்து, அமெரிக்கா தென் சீனக் கடல் பகுதிக்கு கடற்படை கப்பல்களை அனுப்புவது வழக்கமாகும்.

இதன்படி  அமெரிக்கக் கடற்படையின் ஏவுகணை அழிப்புக் கப்பலான யூஎஸ்எஸ் மில்லியுஸ் என்ற கப்பல்  இன்று , பராசெல் தீவுகள் பகுதிக்குள் நுழைந்ததாகவும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது.

இக்கப்பல் சீன அரசாங்கத்தின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக சீன நீர்ப்பரப்புக்குள் நுழைந்து, அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இடையூறு ஏற்படுத்தியது என சீன இராணுவத்தின் பேச்சாளர் தியான் ஜூன்லி கூறியுள்ளார். எனினும்,  அமெரிக்கா இதை நிராகரித்துள்ளது.

தென் சீனக் கடலில், இக்கப்பல் வழக்கமான செயற்பாடுகளை மேற்கொண்டது அது வெளியேற்றப்படவில்லை எனவும் அமெரிக்காவின் இந்தோ பசுபிக் கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டங்கள் அனுமதிக்கும் இடங்களில் அமெரிக்கா தொடர்ந்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் எனவும் அக்கட்டகளைப் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Exit mobile version