Site icon Tamil News

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி மற்றும் கனமழை; 3.5 கோடி பேர் பாதிப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 3.5 கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சூறாவளி காற்று மற்றும் கனமழையால் நேற்றும், இன்றும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சூறாவளியின் பலத்த காற்றின் வேகத்தில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மின் இணைப்புகளும் பரவலாக சேதமடைந்தன. கனமழையால் 3.5 கோடி பேர் பாதிக்கப்பட்டதுடன், 1.2 லட்சம் வீடுகளுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

சான் பிரான்சிஸ்கோ நகரில் மரம் விழுந்ததில், 5 பேர் காயம் அடைந்து உள்ளனர். சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் சராசரியாக 4 மணிநேரம் விமானம் தரையிறங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

சான்டா பார்பரா கவுன்டியில் பலத்த காற்றால் 26 வீடுகள் சேதமடைந்தன. புயலை முன்னிட்டு, குறைந்தது 2 வாரத்திற்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து பொருட்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை வைத்து கொள்ளும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால், வெள்ளம், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மட்டுமின்றி, சான் பிரான்சிஸ்கோ, ஓக்லேண்ட், சாக்ரமெண்டோ, ஸ்டாக்டன் மற்றும் பிரெஸ்னோ ஆகிய நகரங்கள் அனைத்தும் கடந்த அக்டோபர் 1ல் இருந்து வழக்கம்போல் பெய்யும் மழையை விட 150 முதல் 200 சதவீதம் கூடுதல் மழை பொழிவை சந்தித்து உள்ளன.

இதனால், அடுத்த 2 வாரங்களுக்கு பொது பணி துறை ஊழியர்களை 24 மணிநேரமும் தயார் நிலையில் இருக்கும்படி அரசு கூறியுள்ளது. பனிக்கட்டிகளை நீக்குவது, புயலை முன்னிட்டு ரோந்து பணி மேற்கொள்வது உள்ளிட்டவற்றை அவர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Exit mobile version