Site icon Tamil News

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்!

அண்மையில் நிகழ்ந்த ஊடக சந்திப்பொன்றினைத் தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுநரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலான தவறான அறிக்கையிடலை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது.

அத்தகைய ஊடக அறிக்கைகள் ‘பொருளாதாரத்தில் கடினமானதொரு காலகட்டத்தினை ஆளுநர் எதிர்பார்க்கின்றார் எனக் குறிப்பிட்டிருந்தன.

எதிர்பார்க்கப்படுகின்ற சீர்திருத்தங்கள் தாமதமானாலோ அல்லது தடம்புரள்வினை எதிர்கொண்டாலோ எதிர்வருகின்ற காலப்பகுதியில் பொருளாதாரம் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்த கலந்துரையாடலின் பின்னணியில் ஆளுநரினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களிற்கு ஒட்டுமொத்தமாகத் தவறான பொருட்கோடலாக இது காணப்படுகின்றது.

2022இல் காணப்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத சமூக-பொருளாதார பதற்றங்களுடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட கடினமானதும் வேதனையளிக்கின்றதுமான கொள்கைசார் வழிமுறைகள் பொருளாதார நிலைமைகளை உறுதிப்படுத்துவதற்குத் துணைபுரிந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

இச்சீர்திருத்தங்கள் அண்மித்த காலத்தில் மக்களுக்கும் வியாபாரங்களுக்கும் இன்னல்களை ஏற்படுத்துகின்ற சீராக்கச் செலவுகளைத் தோற்றுவித்துள்ள போதிலும், உறுதிப்பாட்டினை மீட்டெடுப்பதற்கு அவை அவசியமாயிருந்ததுடன் எதிர்வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கும் வியாபாரங்களுக்கும் நன்மைகளைப் பெற்றுத்தரும்.

இருப்பினும், வளர்ச்சியை மேம்படுத்துகின்ற சீர்திருத்தங்களை உள்ளடக்கிய எதிர்பார்க்கப்படுகின்ற பொருளாதாரச் சீராக்கச் செயற்றிட்டத்திலிருந்து ஏதேனும் தாமதம் அல்லது விலகல் ஏற்படும் பட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற பொருளாதார மீட்சிக்குக் குறிப்பிடத்தக்க கீழ்நோக்கிய இடர்நேர்வுகளை ஏற்படுத்தும் வேளையில் பொருளாதார தோற்றப்பாட்டினை மெதுவடையச்செய்யக்கூடும் என்ற கருத்தினையே ஆளுநர் மீள்வலியுறுத்தினார்.

எனவே, இலங்கைப் பொருளாதாரமானது வரலாற்றில் எதிர்கொண்டிருந்த மிகவும் மோசமான நெருக்கடியிலிருந்து பொருளாதார மீட்சியடைகின்ற இம்முக்கியமான தருணத்தில், வேண்டுமென்றோ அல்லது வேறுவிதமாகவோ வெளியிடப்படும் தவறான அறிக்கையிடலை எடுத்துரைக்கின்ற ஊடக அறிக்கைகளினால் பொதுமக்கள் ஏமாற்றமடைய வேண்டாமென மத்திய வங்கி பொதுமக்களை வலியுறுத்த விரும்புகின்றது.

 

Exit mobile version