Site icon Tamil News

அமெரிக்காவில் இரு பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்: ஹெலிகாப்டர் மூலம் குற்றவாளிகளை துரத்திப்பிடித்த பொலிஸார்

அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் நான்கு மணி நேர இடைவெளியில் கேளிக்கை விடுதி மற்றும் கார் பார்க்கிங்கில் நடந்த அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு வன்முறையில் நான்கு பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

ஓக்லஹோமா நகரத்தில் உள்ள கேளிக்கை பார் ஒன்றில்  10 மணிக்கு முன்னதாக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் அழைக்கப்பட்டனர்.இந்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், மோசமான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக லாஸ் ஏஞ்சல்ஸின் கார் பார்க்கிங் ஒன்றில் போதைப்பொருள் கும்பல் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 45 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளை லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை ஹெலிகாப்டரின் உதவி கொண்டு மடக்கி பிடித்தனர்.

குற்றவாளிகள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இருந்த காரில் தப்பி சென்ற போது, காவல்துறை ஹெலிகாப்டர் அவர்களை துரத்தி சென்றது.அவர்கள் அடிக்கடி கார்களை மாற்றி கொண்டே இருந்த நிலையில், பொலிஸார் இதனை ஹெலிகாப்டரின் உதவி கொண்டு கண்காணித்து கொண்டு பின் தொடர்ந்தனர்.இறுதியில் போக்குவரத்து சிக்கலில் சிக்கி கொண்டு வெளியேற முயற்சித்த குற்றவாளிகளை பொலிஸார் மடக்கி பிடித்தனர்.

பொலிஸார் தெரிவித்துள்ள தகவலில், குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை மடக்கி பிடித்து இருப்பதாகவும் விசாரணை தீவிரமாக நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன் சம்பவ இடத்திலிருந்து 2 துப்பாக்கிகளை கைப்பற்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version