Site icon Tamil News

WC Super 8 – 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் விராட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ரோகித் 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து ஷிவம் துபே மற்றும் பாண்ட்யா ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடியாக ஆடிய துபே 34 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து அக்சர் படேல் களம் இறங்கினார்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 50 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணியின் சார்பில் லிட்டன் தாஸ் மற்றும் தன்ஸிட் ஹசன் ஆகியோர் களமிறங்கினர்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நஜ்முல் ஹூசைன் சாண்டோ 40 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய ஜாக்கர் அலி 1 ரன்னும், அதிரடி காட்டிய ரிஷத் ஹூசைன் 24 ரன்களும், முகமதுல்லா 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் வங்காள தேச அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, சூப்பர் 8 சுற்றின் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

Exit mobile version