Tamil News

விஜய் அடுத்து அரசியலில் களமிறங்கும் விஷால்… 2026-ல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டி என அறிவிப்பு

2026ல் அரசியல் கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். இதனையொட்டி கோலிவுட் மற்றும் தமிழக அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார். எனினும் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை என அறிவித்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, அதற்கான பூர்வாங்க பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது விஜய் வரிசையில் தனது அரசியல் வருகையை நடிகர் விஷால் இன்று உறுதி செய்தார். வட பழனியில் இன்றைய தினம் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், 2016-ல் அரசியல் கட்சியை அறிவிப்பேன் என அதிரடித்திருக்கிறார்.

விஜய் - விஷால்

பல ஆண்டுகளாகவே சமூக ஆர்வம் மிக்கவராக தனது கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்து வந்ததில், திரைக்கு அப்பாலும் நடிகர் விஷால் கவனம் ஈர்த்து வந்தார். 6 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்வைத்து விஷால் முன்வைத்த அரசியல் நகர்வுகளும் கணிசமாக கவனிக்கப்பட்டன.

தற்போது தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள சூழலில், வாக்களிப்பு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார். இதன் மத்தியில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ’ஏப்ரல் 19 அன்று 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது என்ற செய்தியை கேட்க ஆவலுடன் உள்ளேன்’ என்று தெரிவித்தார்.

மேலும் ‘2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் களமிறங்கப் போவதாகவும்’ விஷால் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் தானும் ஒரு வேட்பாளராக அந்த தேர்தலில் களமிறங்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.இதனையொட்டி கோலிவுட் மற்றும் தமிழக அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது.

Exit mobile version