Site icon Tamil News

வவுனியா இரட்டை கொலையின் பிரதான சந்தேக நபருக்கு அச்சுறுத்தல்!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைகொலை சம்பவம் தொடர்பில் தடுப்பு காவலில் உள்ள பிரதான சந்தேக நபரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து எரியுண்ட வீட்டு உரிமையாளரான குடும்பஸ்தர் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23ம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (08) வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில், சந்தேக நபர்களை மன்றுக்கு அழைத்து வந்த போது, பிறிதொரு வழக்குகாக மன்றுக்கு வந்திருந்த எரியுண்ட வீட்டு உரிமையாளர் இரட்டை கொலை பிரதான சந்தேக நபரை அச்சுறுத்தியதாக பிரதான சந்தேகநபர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரான எரியுண்ட வீட்டு உரிமையாளரை நீதிமன்ற சிறைக் கூண்டில் மன்று தடுத்து வைக்க உத்தரவு பிறப்பித்ததுடன், சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்யுமாறு வவுனியா பொலிஸாருக்கு மன்று உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றம் சென்ற வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், நீதிமன்றில் அச்சுறுத்தியதாக கூறப்பட்ட எரியுண்ட வீட்டு உரிமையாளரை முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட மன்று எரியுண்ட வீட்டு உரிமையாளரை எச்சரித்து விடுவித்ததுடன், இது தொடர்பில் பொலிஸாரை விரிவான விசாரணை செய்யுமாறும், குற்றம் ஏதாவது நிகழ்ந்திருப்பின் மன்றில் பி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததுடன், எரியுண்ட வீட்டு உரிமையாளரை பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கட்டளையிடப்பட்டது.

Exit mobile version