Site icon Tamil News

அமெரிக்கா – 20 ஆண்டுகளாக தவறுதலாக அண்டைவீட்டுக்காரரின் மின்சாரக் கட்டணத்தைத் செலுத்திவந்த நபர்!

நமது வீட்டு மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதில்கூட சில நேரங்களில் சிரமம் ஏற்படலாம்.ஆனால், நபர் ஒருவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தவறுதலாக தம்முடைய அண்டைவீட்டாரின் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தி வந்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த கென் வில்சன் என்பவர், தமது மின்சாரக் கட்டணத்தைப் பார்த்தபோது தொகை மிக அதிகமாக இருந்ததைக் கவனித்தார்.உடனே, அவர் தமது மின்சாரப் பயன்பாட்டைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினார்.

தனியே வாழ்ந்து வந்த வில்சன், தமது மின்சாரக் கட்டணம் மற்ற வீடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகத்தான் இருக்கும் என்று எண்ணினார்.தம்மிடம் உள்ள ஒவ்வொரு மின்சாரச் சாதனமும் எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன என்பதை அளவிடும் கருவி ஒன்றையும் அவர் வாங்கினார்.அவரது முயற்சிகள் கைகொடுத்தன.

தமது மின்சாரக் கட்டணம் கணக்கிடப்பட்டதில் ஏதோ தவறு நடந்ததை அவர் உணர்ந்தார்.யாரோ தமது மின்சாரத்தைத் திருடிப் பயன்படுத்துகிறார் என்றுகூட வில்சன் நினைத்துவிட்டார்.இதனால், உள்ளூர் மின்சார நிறுவனத்துடன் அவர் தொடர்புகொண்டு தமக்கு ஏன் இந்த நிலை என்று விசாரிக்கக் கோரினார்.

இதையடுத்து, வில்சனின் மின்சார மீட்டர், அவரது பக்கத்து வீட்டுடன் தவறுதலாக இணைக்கப்பட்டிருந்ததை மின்சார நிறுவன ஊழியர் கண்டுபிடித்தார்.

வில்சன் 2006ஆம் ஆண்டில் அவ்வீட்டில் குடியேறியதால் 18 ஆண்டுகளாக அவர் செலுத்தி வந்த மின்சாரக் கட்டணத்தில் தவறு நேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.இந்நிலையில், தனது தவற்றுக்காக மின்சார நிறுவனம் மன்னிப்பு கோரியதாக ‘கோல்ட் நியூஸ் 13’ தெரிவித்துள்ளது.

அண்டைவீட்டார் தங்கள் மின்சாரக் கட்டணம் குறித்து ஏன் இத்தனை ஆண்டுகள் எதுவுமே மூச்சுவிடவில்லை என்று இணையவாசிகள் சிலர் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

Exit mobile version