Tamil News

அமெரிக்கா- கூகுள் AI தொழில்நுட்ப தரவுகள் திருட்டு: சீனாவைச் சேர்ந்த நபர் கைது!

கூகுள் AI தொழில்நுட்ப தரவுகளைத் திருடியதாக சீன நாட்டைச் சேர்ந்த நபர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன நாட்டைச் சேர்ந்த லியோன் டிங் (38), கடந்த 2019ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார். இவர், கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டிங் தரவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட மென்பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில், கடந்த 2022 மே மாதம் முதல் 2023 மே மாதம் வரை தனிப்பட்ட கிளவுட் கணக்கில் கூகுளின் AI(செயற்கை நுண்ணறிவு) தொடர்பான ரகசிய தகவல்களை லியோன் டிங், பதிவேற்றம் செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பான விசாரணையில் 2022ம் ஆண்டு ஜூனில், சீனாவின் புதிய தொழில்நுட்ப நிறுவனமான பெய்ஜிங் ரோங்ஷு என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, லியோன் டிங்கை அணுகி, 14,800 டொலர் மாதச் சம்பளத்துடன் தலைமை தொழில்நுட்ப அலுவலர் பதவியை வழங்கினார்.

Opinion | Climate change, nuclear catastrophe, out-of-control AI: how  US-China tech rivalry puts humanity at risk | South China Morning Post

மேலும் கடந்த ஆண்டு மே மாதத்துக்கு முன்பாக லியோன் டிங் தனது சொந்த நிறுவனமாக சீனாவை தளமாகக் கொண்டு ஷாங்காய் ஜிசுவான் டெக்னாலஜி கோ (ஜிசுவான்) என்ற நிறுவனத்தை தொடங்கி, தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்துள்ளார்.

ரோங்ஷு, ஜிசுவான் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தனக்குள்ள தொடர்பு குறித்து லியோன் டிங், கூகுளிடம் பகிர்ந்துகொள்ளவில்லை. இச்சூழலில் கூகுள் AI தொழில்நுட்ப ரகசியங்களை திருடிய விவகாரத்தில் லியோன் டிங் சிக்கினார்.

இந்த விவகாரம் குறித்து கூகுள் செய்தித் தொடர்பாளர் ஜோஸ் காஸ்டனெடா கூறுகையில், “விசாரணைக்குப் பிறகு, லியோன் டிங், ஏராளமான தரவுகளைத் திருடியுள்ளதைக் கண்டறிந்தோம்.எங்கள் வணிக ரகசியங்கள் திருடப்படுவதைத் தடுக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கொண்டுள்ளோம். எங்கள் தகவல்களைப் பாதுகாக்க உதவிய FBI விசாரணை அமைப்புக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் லியோன் டிங், நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், லியோன் டிங்கிற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 2.50 லட்சம் டொலர் வரை அபராதமும் விதிக்கப்படும்.

Exit mobile version