Site icon Tamil News

அமெரிக்க நாடாளுமன்றக் கலவரம்: வளாகத்துக்குள் நுழைந்த முதல் நபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

அமெரிக்காவின் கேப்பிட்டோல் நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் 2021ஆம் ஆண்டு ஜனவரி 6ம் திகதி அத்துமீறி நுழைந்த முதல் நபருக்கு நான்கு ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசாங்க வழக்கறிஞர்கள் இதனை அறிவித்தனர்.

மைக்கல் ஸ்பார்க்ஸ் எனும் 47 வயது நபர் மீது, 2021 ஜனவரி ஆறாம் திகதியன்று கேப்பிட்டோல் வளாகத்தில் அதிகாரி ஒருவர் பணியில் ஈடுபடும்போது இடையூறு விளைவித்தது, தவறான நடத்தை உள்ளிட்டவற்றின் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 27) வா‌ஷிங்டனில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் திமத்தி ஜே. கெல்லி எனும் நீதிபதி, ஸ்பார்க்சுக்கு 53 மாதச் சிறைத் தண்டனையும் 2,000 டொலர் அபராதமும் விதித்தார்.

சிறைத் தண்டனையை நிறைவேற்றிய பிறகு ஸ்பார்க்ஸ், மூன்று ஆண்டுகளுக்குக் கண்காணிக்கப்படுவார் என்றும் அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

2021 ஜனவரி 6ம் திகதியன்று பிற்பகல் 2.13 மணிக்கு ஸ்பார்க்ஸ், கதவு ஒன்றுக்கு அருகே உள்ள சன்னலின்வழி நாடாளுமன்றக் கட்டடத்தின் செனட் பகுதிக்குள் நுழைந்தது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட காணொளி ஆதாரத்தில் தெரிந்தது. கலவரத்தில் ஈடுபட்டோர் காவல்துறையினரின் பாதுகாப்புக் கவசத்தைப் பயன்படுத்தி அந்த சன்னலை உடைத்ததாகக் காவல்துறையினர் கூறினர்.

Exit mobile version