Tamil News

செங்கடலில் பதிலடி தரும் நோக்கில் அமெரிக்க வான்படையினர் அதிரடி தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க வான்படையினர் நடத்திய தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலியாகி உள்ளனர். அவர்களது 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 3 மாதங்களை கடக்க உள்ளது. இதனால் மத்திய கிழக்கு முழுமைக்கும் பதற்றம் தொடர்ந்து வருகிறது. இதில் ஒன்றாக, காசாவின் ஹாமஸ் படையினருக்கு ஆதரவாக, ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்களது செங்கடல் தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இதன்படி இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் செங்கடலில் கடக்கும்போது அவற்றை தாக்குவோம் என அறிவித்திருந்தனர்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது போர்க்கப்பலை அங்கே நிலை நிறுத்தியுள்ள அமெரிக்கா, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து பதிலடி தந்து வருகிறது. இந்த வகையில், சிங்கப்பூர் கொடியுடன் செங்கடலை கடந்த சரக்கு கப்பல் ஒன்றினை ஞாயிறன்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குறிவைத்தனர். 4 படகுகளில் வந்த கிளர்சியாளர்கள் சரக்குக் கப்பலில் ஏறி தாக்குதல் தொடுக்க முயன்றனர். சரக்கு கப்பல் சார்பில் உதவி கோரப்பட்டதை அடுத்து, அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் அங்கு விரைந்தன.

US downs missiles in Red Sea after ship attacked by Houthi rebels - World  News

சரக்கு கப்பலில் ஏறிய தாக்குதல் தொடுத்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்க கடற்படையினர் முதலில் எச்சரிக்கை விடுத்தனர். அவற்றுக்கு இணங்க மறுத்தவர்கள் மீது அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டர்கள் அதிரடித் தாக்குதல் நடத்தின. இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களில் 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் படகுகளில் 3 மூழ்கடிக்கப்பட்டன. மீதமிருந்த ஒரு படகில் ஒரு சிலர் உயிர் தப்பினர். அமெரிக்காவின் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்ததை ஏமனில் இருந்து ஹவுதி ஆயுதக்குழுவினர் இன்று உறுதி செய்தனர்.

காசா – இஸ்ரேல் மோதலை அடுத்து சூயஸ் கால்வாய் வாயிலாக பயணத்தை தொடர சர்வதேச கப்பல்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றன. ஆப்பிரிக்காவை சுற்றிக்கொண்டு பெரும் பொருட்செலவில் நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் நெருக்கடிக்கும் அவை ஆளாகி வருகின்றன. எனவே செங்கடல் பாதுகாப்பில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் இணைய இதர நாடுகள் மத்தியில் தயக்கம் தென்பட்டு வருகிறது. இதனிடையே, ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்க ஈரான் உதவ முன்வர வேண்டும் என்று பிரிட்டன் கோரிக்கை வைத்துள்ளது.

Exit mobile version