Site icon Tamil News

இலங்கையில் சீரற்ற வானிலை – காலநிலை தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்றும் தொடரக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற இடையூரின் காரணமாக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு ,காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Exit mobile version