Site icon Tamil News

தேர்தலில் போட்டியிட டிரம்ப்புக்கு தகுதியே இல்லை- அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை டொனால்டு டிரம்ப் இழந்துவிட்டதாக கொலராடோ மாகாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (77). இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவியில் இருந்தார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் தோல்வியை தழுவினார். இதனால் அவரது ஆதரவாளர்கள் கடந்த 2021 ஜனவரி 6ம் திகதி அன்று வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடாலில் நுழைந்து போராட்டம் நடத்தினர்.

அப்போது ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அமெரிக்காவில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிலையில், டொனால்டு டிரம்ப் மீதான வழக்கை விசாரித்த கொலராடோ நீதிமன்றம், “அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்த விதிமீறல் காரணமாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை டொனால்டு டிரம்ப் இழந்துவிட்டார். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வுக்கான வாக்குச் சீட்டில் டொனால்டு டிரம்ப் பெயரை தவிர்க்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிட கொலராடோ நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், இதை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டொனால்டு டிரம்ப் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது எனவும் அந்நாட்டு சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version