Site icon Tamil News

அளவிற்கு அதிக வைட்டமின் டி மாத்திரைகள் கிட்னி – மூளைக்கு விஷமாகும்

சூரிய ஒளி என்றும் அழைக்கப்படும் வைட்டமின் டி நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. சூரிய ஒளியில் வெளிப்படும் போது நமது உடல் வைட்டமின் D ஊட்டச்சத்தை உற்பத்தி செய்கிறது.

வைட்டமின் டி உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கிறது. உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்பட, வைட்டமின் டி மிகவும் அவசியம் என்பதால், எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மேலும், உங்கள் மனநிலையை மேம்படுத்தும் சக்தி கொண்டது வைட்டமின் டி. வைட்டமின் டி குறைபாடு மிகவும் பொதுவான பிரச்சனை ஆகும்.

குறிப்பாக சைவ உணவு உண்பவர்களிடையே இந்த பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், வைட்டமின் டி குறைபாடு மூட்டு வலிகளை அதிகப்படுத்துவதோடு, உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்தும்.

இன்றைய காலகட்டத்தில், போதுமான வைட்டமின் டி உட்கொள்வதன் முக்கியத்துவத்தையும், உடலில் வைட்டமின் டியின் உகந்த அளவை பராமரிக்காததன் விளைவுகளையும் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்வது முன்னெப்போதையும் விட மிகவும் பொதுவானதாகிவிட்டது.

இருப்பினும், அதிகப்படியான வைட்டமின் டி உட்கொள்வதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பலருக்குத் தெரியாது. அளவிற்கு அதிகமாக எதையும் எடுத்துக் கொள்வது ஆபத்து. எனவே, வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதிகமாக உட்கொள்ளும் போது, நீங்கள் சில ஆபத்தான பக்க விளைவுகளை சந்திக்கலாம் (Health Tips) . இவற்றில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வைட்டமின் டி நச்சுத்தன்மை (Vitamin D toxicity) அல்லது ஹைப்பர்வைட்டமினோசிஸ் டி (Hypervitaminosis D ) என்பது உங்கள் உடலில் வைட்டமின் டி அளவுகள் தேவைக்கு அதிகமாக இருக்கும்போது ஏற்படும் ஒரு நிலை. வைட்டமின் டி நச்சுத்தன்மையின் சில அறிகுறிகளில், உயர் இரத்த அழுத்தம், மன ஆரோக்கியம் பாதிப்பு, சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் செரிமான பிரச்சினைகள் ஆகியவை அடங்கும்.

வைட்டமின் டி நச்சுத்தன்மையின் முக்கிய விளைவுகளில் ஒன்று, உங்கள் இரத்தத்தில் கால்சியம் அதிகமாகக் குவிவது, இது ஹைபர்கால்சீமியா (hypercalcemia) என்றும் அழைக்கப்படுகிறது. ஹைபர்கால்சீமியா குமட்டல், வாந்தி, பலவீனம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும்.

சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், வைட்டமின் டி நச்சுத்தன்மை எலும்பு வலி மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு பங்களிக்கும். அதிகப்படியான வைட்டமின் டி காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுவதால், உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. சிறுநீரகத்தில் இருக்கும் இரத்த நாளங்கள் சுருங்கி, சிறுநீரகத்தின் செயல்பாடும் பாதிக்கப்படும்.நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் படி, 1-70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 15 mcg அல்லது 600 IU வைட்டமின் D உட்கொள்ள வேண்டும். வயது, சூரிய ஒளி உடலில் படுதல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப உங்களுக்கான வைட்டமின் தினசரி தேவையைப் புரிந்து கொள்ள ஒரு மருத்துவ நிபுணரை அணுகவும். மேலும், ஒரு நிபுணரின் ஆலோசனை இல்லாமல் சப்ளிமெண்ட்ஸ் மாத்திரைகள் எடுக்க கூடாது.

இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

Exit mobile version