Tamil News

இஸ்ரேலின் ரஃபா மீதான தாக்குதலை நிறுத்த கோரிய மனுவில் உலக நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ராஃபாவில் தாக்குதலை நிறுத்தி, காஸாவிலிருந்து வெளியேற இஸ்‌ரேலுக்கு உத்தரவிட வேண்டுமென்று தென்னாப்பிரிக்கா முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் அனைத்துலக நீதிமன்றம், இன்று (24) தீர்ப்பு வழங்கவிருக்கிறது.

நெருக்கடி நேர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படித் தென்னாப்பிரிக்க வழக்கறிஞர்கள் சென்ற வாரம் அனைத்துலக நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.பாலஸ்தீன மக்கள் உயிர்வாழ ராஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

காஸாவில் இனப்படுகொலை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று இஸ்‌ரேல் தொடர்ந்து மறுத்துவருகிறது.காஸாவில் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அனைத்துலக நீதிமன்றத்தில் இஸ்ரேல் தெரிவித்தது. கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலைத் தாக்கிய ஹமாஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்தே தான் செயல்படுவதாக அது கூறியது.

Israel anticipates ICJ injunctions to halt Gaza war

“இஸ்‌ரேல் அதன் குடிமக்களைப் பாதுகாக்கவும் காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உலகின் எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது,” என்று இஸ்ரேலிய அரசாங்கப் பேச்சாளர் வியாழக்கிழமை (மே 23) கூறினார்.அந்நாட்டு ராணுவப் பேச்சாளர், ராஃபாவில் இஸ்‌ரேலிய ராணுவம் கவனத்துடனும் துல்லியமாகவும் செயல்படுவதாகக் கூறினார்.

இந்நிலையில், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக நீதிமன்றம் இஸ்ரேலுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினால் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அரசாங்கத்தின்மீது கூடுதலான அரசதந்திர நெருக்குதல்கள் சுமத்தப்பட அது வழிவகுக்கும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகள் சில, பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிப்பதாக மே 22ஆம் திகதி தெரிவித்தன.

இஸ்‌ரேலியப் பிரதமர், தற்காப்பு அமைச்சர், ஹமாஸ் தலைவர்கள் ஆகியோர் மீது கைதாணை பிறப்பிக்கும்படி மனுத் தாக்கல் செய்திருப்பதாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கூறினார்.

போர்க் குற்றங்கள், மனிதநேயக் குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றில் தனிநபர்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் வழக்குகளை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கும்.

Exit mobile version