Site icon Tamil News

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விடுதிக்குள் நுழைந்த மூவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களின் விடுதிக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டதுடன் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இருவருக்கு பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்பி தவறாக வழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதான அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவை செப்டம்பர் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரிவித்து நேற்று இரவு பொலிஸாருக்கு முறைப்பாடளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார் வைத்தியசாலை விடுதி அறைக்கு வெளியே வைத்தியரை அழைத்தபோதும், வைத்தியர் வெளியே வராததால் சந்தேகமடைந்த பொலிஸார் விடுதி அறையை உடைத்து உள்ளே சென்றனர்.

இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் அங்கு சென்ற பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்தில் நின்ற மு.தம்பிராசாவையும் காணொளியை எடுக்க முயன்ற இருவரையும் என மூவரை பொலிஸார் கைது செய்தனர்.

சாவகச்சேரி பொலிஸார் விசாரணைக்கு பின்னர் மூவரையும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தினர்.

விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் ஏனைய இருவரையும் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.

Exit mobile version