Site icon Tamil News

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்! குகி ஸோ இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை

மணிப்பூரில் குகி சோ பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அங்கு மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

மணிப்பூரின் கங்போப்கி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுக்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குகி சோ பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆயுதம் தாங்கிய குழு வாகனத்தில் வந்து மேற்கு இம்பால்-காங்போப்கி மாவட்டங்களுக்கு இடையே உள்ள எல்லை கிராமங்களான இரங் மற்றும் கரம் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த இரண்டு மலைக்கிராமங்களிலும் பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். முன்னதாக கடந்த 8ம் தேதி தெங்னோபால் மாவட்டத்தில் உள்ள பலால் என்ற இடத்தில் நடந்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தின் தாக்கம் குறையும் முன்னரே இன்று மற்றுமொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மே 3 அன்று தொடங்கிய வன்முறை: மணிப்பூர் மாநில மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மைதேய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாகர்கள், குக்கிகள் போன்ற பழங்குடியினர் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மலையக மாவட்டங்களில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 53 சதவீதமாக உள்ள மைதேயி சமூகத்தை, பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்த்ததற்கு எதிராக, கடந்த மே, 3ம் தேதி நடந்த பழங்குடியினர் அமைதி பேரணியில், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவியது. மணிப்பூர் மாநிலம் வன்முறையில் மூழ்கியது.

வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையை மாநில அரசு அழைத்தது. இந்த வன்முறையில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளனர், ஆனால் பதற்றம் முழுமையாகத் தணியவில்லை. இந்நிலையில் இன்று மீண்டும் அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version