Site icon Tamil News

முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இந்தியாவை விட்டு வெளியேற விரைவில் அனுமதி: பயண ஆவணங்களுக்கு நாளை விண்ணப்பம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன் , ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் நாளைய தினம் இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்னை மேல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை பெறுவதற்காக இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி முருகனின் மனைவியான நளினி சென்னை மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனு இன்று மீண்டும் சென்னை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர்கள் மூவரும் இலங்கை பிரஜைகள் தற்போது திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் நாளைய தினம் சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் விடுதலையின் ஒரு பகுதியாக பயண ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கவுள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள தனது மகளுடன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என முருகனின் கோரிக்கை மீது ஆட்சியர் நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்தார்.

கடவுச்சீட்டு மற்றும் பயண ஆவணங்களை இலங்கை அனுமதித்தால் மட்டுமே அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடியும். சென்னையை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்ட ஜெயக்குமார், இந்தியாவில் தங்க முடிவு செய்துள்ளார்.

2022 நவம்பரில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற மூவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அவர்களிடம் பயண ஆவணங்கள் இல்லாததால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

வழக்கின் மற்றொரு குற்றவாளியான சாந்தன், இலங்கை செல்ல அனுமதி கிடைத்த நிலையில் உயிரிழந்தார். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Exit mobile version