Site icon Tamil News

எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிகளே இருக்காது – எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு

எதிர்காலத்தில் செல்போன் இல்லாமலேயே, மனிதர்கள் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்ற சாத்தியத்தை Neuralink chip உருவாக்கி இருப்பதாக, எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Pandora என்ற உலகத்தில் வாழும் வேற்றுகிரக மனிதர்கள், செல்போன் இல்லாமலேயே டெலிபதி முறையில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையில் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள் என காட்சிப்படுத்தி இருப்பார் அவதார் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

அதுபோன்ற திறன் மனிதர்களாகிய நமக்கும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறியிருக்கிறார் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் CEO ஆன எலான் மஸ்க். எக்ஸ் தளத்தில் பயனாளர் ஒருவர் எலான் மஸ்க் இடம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது, உங்களின் புதிய ஸ்மார்ட் ஃபோனை கட்டுப்படுத்துவதற்காக மூளையில் Neuralink chip-ஐ பொருத்திக் கொள்ள சம்மதிப்பீர்களா? எனக் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், எதிர்காலத்தில் மொபைல் போன்களே இருக்காது. வெறும் Neuralink மட்டுமே வியாபித்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Neuralink என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படும்? என்ற பல கேள்விகளுக்கு எலான் மஸ்க் ஏற்கனவே பதில்களை அளித்திருக்கிறார். விண்வெளி ஆய்வுக்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய எலான் மஸ்க், மனிதர்களின் மூளையுடன் இணைக்கக் கூடிய Brain chip-ஐ தயாரிக்க Neuralink என்ற பயோ டெக்னாலஜி நிறுவனத்தையும் தொடங்கினார்.

இந்த நிறுவனம் தயாரித்த Neuralink என்ற Chip, குரங்குகள் மற்றும் பன்றிகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு மனிதர்கள் உடலில் பொருத்தி பரிசோதிக்க அமெரிக்கா அனுமதி அளித்தது.

அதன் தொடர்ச்சியாக ஒரு நபருக்கு Neuralink Chip மூளையில் பொருத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. மூளையின் குறிப்பிட்ட பகுதியில் மண்டை ஓட்டை ஒரு நாணயம் அளவுக்கு வட்ட வடிவில் நீக்கி விட்டு, இந்த Neuralink Chip ஐ சிறப்புக் கருவியின் உதவியுடன் மூளையுடன் இணைத்து விடுவார்கள். பின்னர் நீக்கப்பட்ட மண்டை ஓட்டின் பகுதியை மீண்டும் அதே இடத்தில் வைத்து பொருத்தி விடுவார்கள். மயக்க மருந்து ஏதும் கொடுக்காமலேயே இந்த அறுவை சிகிச்சையை 30 நிமிடங்களில் செய்து விட முடியும் என்றும், அதேநாளில் சம்பந்தப்பட்ட நபர் வீடு திரும்பலாம் என்றும் எலான் மஸ்க் கூறியிருந்தார்.

அப்படி ஒரு நபருக்கு Neuralink Chip பொருத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், மற்றொரு நபருக்கு Neuralink Chip பொருத்தும் பணியை Neuralink நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை அந்த நிறுவனம் பெற்று வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் இரண்டாவது நபருக்கு Neuralink Chip மூளையில் பொருத்தப்பட்டு விட்டால், இரண்டு பேரும் செல்போன் உதவியின்றி ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாகும் பட்சத்தில் 2050ஆம் ஆண்டில் செல்போன் என்ற கருவியே இல்லாமல் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மூளையில் உள்ள நியூரான்களை கட்டுப்படுத்தும் திறன் வாய்ந்த இந்த Neuralink Chip-கள், பிறவியில் இருந்தே பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு பார்வைத் திறன் அளிக்கவும், விபத்துகளில் சிக்கி முதுகெலும்பு பாதிக்கப்பட்டு பக்கவாதத்தால் அவதிப்படுபவர்கள் மீண்டும் உடல் உறுப்புகளை வழக்கம் போல் இயங்க வைக்கவும் பெரிதும் உதவும் என எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.

Exit mobile version